துருக்கி வான்பரப்பில் ஈரானிய ஏவுகணை ஊடுருவல்: "ஆயிரம் காலத்து நட்பை நாசமாக்க வேண்டாம்" என ஈரானுக்கு எர்டோகன் கடும் எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் உக்கிரமடைந்துள்ள போர் நெருக்கடி, தற்போது நேட்டோ (NATO) உறுப்பு நாடான துருக்கியின் எல்லைகளையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. ஈரானில் இருந்து ஏவப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை ஒன்று துருக்கியின் வான்பரப்பிற்குள் ஊடுருவியதையடுத்து, அங்கு தயார் நிலையில் இருந்த நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அதனைச் சுட்டு வீழ்த்தியுள்ளன. துருக்கி வான்பரப்பிற்குள் ஈரானிய ஏவுகணை ஒன்று நுழைந்த இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
எர்டோகனின் கடும் கண்டனமும் எச்சரிக்கையும்
இச்சம்பவத்தையடுத்து அங்காராவில் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன், ஈரானின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குக் கடும் கண்டனம் வெளியிட்டார். "எமது முதன்மையான இலக்கு, நாட்டை இந்தப் போர் நெருப்பில் இருந்து பாதுகாப்பதே ஆகும்" எனத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான "ஆயிரம் காலத்து அண்டை மற்றும் சகோதரத்துவ உறவுகளில்" நிழல் விழும் வகையிலான எந்தவொரு தவறான மற்றும் ஆத்திரமூட்டும் நகர்வுகளையும் ஈரான் மேற்கொள்ளக் கூடாது எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு என அனைத்துக் கோணங்களிலும் போரின் தாக்கங்களை மதிப்பீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட எர்டோகன், கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் துருக்கியின் அனைத்து அரச மற்றும் இராணுவக் கட்டமைப்புகளும் உச்சக்கட்ட உஷார் நிலையில் (High Alert) வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
மேலும், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், துருக்கியால் மாத்திரமே தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள வடக்கு சைப்ரஸ் (Northern Cyprus) பகுதிக்கு, 6 அதிநவீன F-16 போர் விமானங்களைத் துருக்கி அவசரமாக அனுப்பி வைத்துள்ளது. இது பிராந்தியத்தில் துருக்கியின் இராணுவத் தயார்நிலையை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
நேட்டோ 'ஆர்ட்டிக்கிள் 5' மற்றும் உலகப் போர் அபாயம்
துருக்கியின் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நேட்டோ உறுப்பு நாடான துருக்கி மீது ஈரான் தவறுதலாகவேனும் தாக்குதல் நடத்தினால், அது நேட்டோ சாசனத்தின் 5 ஆவது சரத்தின் (Article 5) கீழ், ஒட்டுமொத்த 32 நேட்டோ நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும். இது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஈரானுக்கு எதிராக நேரடியாகப் போரில் ஈடுபடுவதற்கும், தற்போதைய மோதல் ஒரு மூன்றாம் உலகப் போராக உருவெடுப்பதற்குமான அபாயத்தை அதிகரித்துள்ளது.
#Tubetamil24X7 #Turkey #Erdogan #IranWar2026 #NATOPowers #Article5 #F16Cyprus #MiddleEastCrisis #WorldWar3 #BreakingNewsTamil #JaffnaNews #USvsIran #GlobalWar #TamilNewsToday #GeopoliticsTamil
