வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் (நிழல் உலக) உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 226 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கைகள் (Red Notices) விடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நிஷாந்த சொய்சா, நேற்று(23) மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச சிவப்பு எச்சரிக்கைஅங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர், மாத்திரம் 35 சந்தேகநபர்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கை மூலம் பல்வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 33 பேர் உள்ளிட்ட பெருமளவிலான குற்றவாளிகளும் அவ்வாறே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
சர்வதேசப் பொலிஸாரின் (Interpol) ஒத்துழைப்புடன் தற்போது வரை இலங்கைக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காகச் சுமார் 226 சிவப்பு எச்சரிக்கைகள் பெறப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 226 பேரில், சுமார் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களைச் சேர்ந்த ஆபத்தான குற்றவாளிகள் 90 பேர் உள்ளடங்கியுள்ளனர்.இவர்கள் தற்போது துபாய், இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் தலைமறைவாக பதுங்கியிருப்பது நம்பகமான தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவர்கள் அனைவரையும் சர்வதேச சட்டக் கட்டமைப்புகளுக்கு அமைவாக, மிக விரைவில் இலங்கைக்குக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கைகள் தற்போதைய அரசினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா மேலும் தெரிவித்துள்ளார்.

