அமெரிக்காவுக்கு ஈரானின் புதிய கெடு! 

மே 3: "டிரம்பிற்குச் செல்லும் புதிய 14 அம்சத் திட்டம்!" 

"போர்நிறுத்தத்தை நீட்டிப்பதில் பயனில்லை, போரை நிரந்தரமாக முடிப்பதே இலக்கு! - ஓமன் மூலமாக இராஜதந்திர நகர்வுகளைத் தீவிரப்படுத்தும் ஈரான்!"
ஈரான் வழங்கியுள்ள புதிய 14 அம்சத் திட்டத்தின்படி, இரு தரப்புப் பிரச்சனைகளும் 30 நாட்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும். தற்போதுள்ள தற்காலிகப் போர்நிறுத்தத்தை நீட்டிப்பதை விட, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்காவின் 9 அம்சத் திட்டத்திற்குப் பதிலடியாக அமைந்துள்ள இந்தத் திட்டத்தில், ஈரானின் மீதான தடைகளை நீக்குதல், கடல் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல், பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுதல் மற்றும் லெபனானில் இஸ்ரேலின் செயல்பாடுகள் உட்பட அனைத்து மோதல்களையும் நிறுத்துதல் ஆகியவை கோரப்பட்டுள்ளன. இத்தகவலை ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள 'நூர் நியூஸ்' (Nour News) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் ஈரான் அளித்த முந்தைய திட்டத்தை அதிபர் டிரம்ப் நிராகரித்த போதிலும், இரு தரப்புக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, மூன்று வாரங்களாக அமுலில் இருக்கும் தற்காலிகப் போர்நிறுத்தமும் தொடர்ந்து நீடிக்கிறது.
போருக்கு முந்தைய கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்திய ஓமன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அல்-புசைடியுடன், ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஞாயிற்றுக்கிழமையன்று தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
"ஒருபுறம் அமெரிக்காவிற்கு 30 நாள் கெடு.. மறுபுறம் ஓமன் மூலம் இராஜதந்திர நகர்வுகள்!" அமெரிக்காவுடனான மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர ஈரான் தீவிரம் காட்டி வருவதை இது உணர்த்துகிறது. டிரம்ப் நிர்வாகம் இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!
