மே 4: "ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் பதற்றம்!"
ஓமன் கடல் பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் அழிப்புக் கப்பல்கள் தங்கள் 'ரேடார்களை முழுமையாக அணைத்துவிட்டு' ரகசியமாக ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்க முயன்றதாக ஈரானிய ராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கப்பல்கள் மீண்டும் தங்கள் ரேடார்களை ஆன் செய்தவுடன், ஈரானியக் கடற்படை அவற்றைக் கண்டறிந்தது. போர்நிறுத்த விதிகளை மீறுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து, அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு உடனடியாக வானொலி மூலமாக இஸ்லாமியக் குடியரசின் கடற்படை எச்சரிக்கை விடுத்தது.
ஈரானியக் கடற்படை விடுத்த இந்த முதல் கட்ட எச்சரிக்கையை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டுத் தொடர்ந்து அதே திசையில் முன்னேற முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அத்துமீறலையடுத்து, எதிரிக் கப்பல்களுக்கு அருகே 'குரூஸ் ஏவுகணைகள்', ராக்கெட்டுகள் மற்றும் போர் ட்ரோன்களை ஏவி ஈரான் அதிரடியான எச்சரிக்கை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக 'IRIB' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. "இந்த ஆபத்தான நடவடிக்கைகளின் விளைவுகளை அமெரிக்க-சியோனிச எதிரிகளே சந்திக்க நேரிடும்" என ஈரான் பகிரங்கமாகக் கடுமையாக எச்சரித்துள்ளது.
