மன்னார் படுகையில் சுமார் 2 பில்லியன் பீப்பாய் பெற்றோலும், 9 டிரில்லியன் கனஅடி இயற்கை எரிவாயுவும் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய வளங்கள் மேம்பாட்டு ஆணையகத்தின் பணிப்பாளர் நாயகம் நீல் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உண்மையான எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இயற்கை எரிவாயு மற்றும் திரவங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், இதன்மூலம் மன்னார் படுகையில் பெட்ரோலிய வளங்கள் இருப்பதற்கான சாத்தியம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வளங்கள் வர்த்தக ரீதியாக பயன்படுத்தக்கூடிய அளவில் உறுதி செய்யப்பட்டால், இலங்கையின் எரிபொருள் இறக்குமதி செலவைக் குறைப்பதுடன், மேலதிக எரிபொருளை ஏற்றுமதி செய்து அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படலாம் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதற்காக மன்னார் படுகையில் சுமார் 34,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட கடல்சார் பகுதியிலுள்ள நான்கு கட்டங்களில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், “இலங்கை பணக்கார நாடாக மாறப்போகிறது” என்பது தற்போது உறுதி செய்யப்பட்ட முடிவு அல்ல. எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது வேறு; அவற்றை வணிக ரீதியாக அகழ்ந்து எடுத்து, லாபகரமாக பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துவது வேறு. இதற்காக மேலும் ஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் அவசியம்.

மன்னார் படுகையின் இயற்கை வளங்கள் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமையுமா?