நீர்கொழும்பு அருகிலுள்ள கடற்பகுதியில் பல கடற்றொழில் படகுகள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, கடற்றொழிலாளர்களை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

காணாமல் போனவர்களைத் தேடுவதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Bell 412 ரக உலங்கு வானூர்தியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் நேற்று (31) பிற்பகல் கடற்றொழிலுக்குச் சென்ற ஒரு சிறு படகு விபத்துக்குள்ளானது தெரியவந்தது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, மேலும் 3 கடற்றொழில் படகுகள் காணாமல் போயிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, விபத்துக்குள்ளான படகுகளில் ஒன்றில் பயணித்த ஒரு கடற்றொழிலாளரின் சடலம் நீர்கொழும்பு கரையோரத்தில் மீட்கப்பட்டுள்ள நிலையில், அதே படகில் இருந்த மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் மற்றும் படகுகளைத் தேடும் பணியில் கடற்படைக் கப்பல், விசேட நீர்மூழ்கிக் குழு, விமானப்படை மற்றும் கடற்படை அணிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

காணாமல் போனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டுமென அனைவரும் பிரார்த்திப்போம்.