மன்னார் தீவைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆய்வுக்காக மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மன்னார் தீவில் இடம்பெற்று வரும் மணல் அகழ்வுப் பணிகளால் ஏற்பட்டுள்ள பாரிய சூழலியல் பாதிப்புகள் குறித்தும் ஆயர் பேரவை கவனம் செலுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சிக்கு இத்தகைய திட்டங்கள் சாதகமானதாக இருந்தாலும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீடு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கு உரிய தகவல் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என ஆயர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

மேலும், அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அப்பகுதி மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் முறையான கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மீன்பிடிச் சமூகத்தின் வாழ்வாதாரமும் நீர்வளங்களும் பாதிக்கப்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகஸ்ட் 18 முதல் 20ஆம் திகதி வரை நடைபெற்ற இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முழு அமர்வின்போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.