கடவத்தை, வபட பகுதியில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கொல்லப்பட்ட செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்தின் சகோதரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த சந்தேகநபரின் தந்தையும் டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வபட பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, 2 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள், பல்வேறு வகைகளைச் சேர்ந்த 534 துப்பாக்கி ரவைகள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட எட்டு துப்பாக்கிகள் மற்றும் இரண்டு ஜோடி கைவிலங்குகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள குற்றவாளி ஒருவரின் அறிவுறுத்தலின்படி, குறித்த ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களைச் சேமித்து வைத்திருந்ததாகவும், அவரின் உத்தரவுகளுக்கு அமைய பல்வேறு நபர்களுக்கு அவற்றை விநியோகித்து வந்ததாகவும் சந்தேகநபர் விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டைத் தளமாகக் கொண்டு செயற்படும் குறித்த குற்றவாளிக்காக துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களை எடுத்துச் செல்லும் முக்கிய நபராக சந்தேகநபர் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

