மகிந்த பொருளாதாரப் படுகொலையாளி : மைத்திரி அரசியலமைப்பு மீறலாளி - சுனில் வட்டகல கருத்து

Author
0

 அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதி நீதித்துறையை ஆக்கிரமிப்பதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சியினர், தற்போது நீதிமன்றத் தீர்ப்புக்கு அப்பாற்பட்டு ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிக்கின்றனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(19.10.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும் உரையாற்றுகையில், "இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவை சுயாதீனமாகவும் முறையாகவும் விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

விசாரணைத் தரப்பினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தி நீதிமன்றத்தில் அறிக்கைகளைச் சமர்ப்பிக்கின்றனர்.

நீதிமன்றமே கைதுகளுக்கான உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றது. அவ்வாறிருக்கையில், இது எவ்வாறு அரசியல் பழிவாங்கலாகும்?

கடந்த கால அரசுகள் சர்ச்சைக்குரிய வழக்குகள் சிலவற்றைத் தாக்கல் செய்தபோதிலும், அவற்றுக்கான விசாரணைகளைச் சரியாக முன்னெடுக்கவில்லை.

அரசியல் தலையீடுகள் காரணமாகப் பல வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தால் மீளப்பெறப்பட்டன. 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் நீதித்துறை இல்லாதொழியும் என்றும், ஜனாதிபதி நீதித்துறையை ஆக்கிரமிப்பார் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.


ஆனால், அவர்களே இன்று நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். எதிர்க்கட்சியினரைப் போல் எம்மால் நீதித்துறையைத் எமது தேவைக்கேற்பப் பயன்படுத்த முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.


நீதித்துறைக்கு அப்பாற்பட்டுத் தாம் செயற்பட முடியாது என ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளமையை அனைவரும் படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்த பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, "முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொருளாதாரப் படுகொலையாளியாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசமைப்பை மீறிய குற்றவாளியாகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடிப்படை உரிமைகளை மீறிய குற்றவாளியாகவும் உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலைக்குத் தற்போதைய ஜனாதிபதி ஒருபோதும் செல்லமாட்டார் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்" என்றும் கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top