இலங்கையின் கடற்பிராந்தியத்துக்கு மிக அருகாமையில் நங்கூரமிடப்பட்டுள்ள அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட ஈரானிய மற்றும் ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கி கப்பல்களுக்கு உதவுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கப்பல்களுக்கு எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு முன்பு இலங்கை தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கப்பல்களுக்கு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், அமெரிக்காவின் இரண்டாம் நிலை தடைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கப்பல்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாக செய்திகள் வெளியான நிலையில், அமெரிக்காவிடமிருந்து நேரடி அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இலங்கைக் கடற்கரையில் சுமார் 47 வெளிநாட்டு கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. அவற்றில் 19 கப்பல்கள் ஈரானிய கொடியின் கீழ் பயணிக்கின்றன.
கப்பல்கள் இலங்கையின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்குள் இருப்பதாகவும், ஆனால் 12 கடல் மைல் எல்லைக்குட்பட்ட கடற்பகுதிக்கு வெளியே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் கடல் சட்ட மாநாட்டின் 98வது பிரிவின்படி, கடலில் ஆபத்தில் உள்ள நபர்களுக்கு உதவுவது நாடுகளின் கடமையாகும்.
இருப்பினும், இந்த கப்பல்களுக்கு பொருட்களை வழங்குவதற்கான சட்டப்பூர்வக் கடமையானது, கப்பல்கள் இருக்கும் இடத்தைப் பொறுத்து மட்டுமல்லாமல், மாலுமிகள் உண்மையான ஆபத்தில் இருக்கிறார்களா மற்றும் அவர்கள் உதவி கோரும் சூழ்நிலைகளைப் பொறுத்தும் தீர்மானிக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, இலங்கையின் எதிர்கால முடிவு, நாட்டின் மனிதாபிமான பொறுப்புகளையும், அதன் வெளியுறவுக் கொள்கை சுதந்திரத்தையும், பொருளாதார நலன்களையும் சோதிக்கும் என்றும் கூறப்படுகின்றது.

