செம்மணி விவகாரத்தில் உள்ளக விசாரணைகள் உண்மைகளை ஒருபோதும் வெளிப்படுத்தாது. அரசு நேர்மையாகச் செயற்பட விரும்புகின்றது என்றால், சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இணங்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும், "யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா தனது அறிக்கையின் 17ஆவது பக்கத்தில், சுகாதார விபத்து காரணமாகக் கணிசமான நபர்கள் உயிரிழந்து புதைக்கப்பட்டுள்ளமையுடன் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைகுழி ஒத்துப்போவதாகவும், அதனை நிராகரிப்பதற்கு எவ்விதமான காரணமும் இல்லை என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதே பந்தியில், இதுவரை கண்டறியப்பட்டுள்ள உடல்கள் தொடர்பில் நிபுணத்துவ குறைபாடுகள் காரணமாக இன்னும் எத்தனையோ விடயங்கள் செய்ய வேண்டியுள்ள காரணத்தால் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவுகளை அறிவிக்க முடியாது என்று குறிப்பிட்டுவிட்டு, சுகாதார விபத்தில் நடந்ததை போன்ற கருத்தையும் பதிவு செய்கின்றார்.
பேராசிரியர் ராஜ் சோமதேவா எந்த அடிப்படையில் தனது அறிக்கையில் இந்தக் கருத்துக்களைக் குறிப்பிட்டார்? 17 பக்கங்களை உள்ளடக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிட்ட விபத்து தொடர்பிலும் விபட்டை உறுதிப்படுத்தும் வகையிலும் ஆதாரங்கள் எதனையும் சமர்ப்பிக்காமல், முடிவுக்கு வர முடியாது என்று கூறிக்கொண்டு, குறிப்பிட்ட விடயத்தை அழுத்திக் கூறும் வகையில் குறிப்பிட்டுள்ளார் என்றால், அவரின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது.
இதேவேளை, அவர் இதற்கு முன்னர் மூன்று அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர் தனது தனிப்பட்ட முடிவுகளை அவற்றில் குறிப்பிட்டுள்ளார். முதலாவது அறிக்கையில் பாரிய புதைகுழி என்று குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், இதற்கு முன்னர் செம்மணி தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் தமிழ்த் தேசியவாதத்தை எதிர்த்த தரப்புகளும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். ராஜன் ஹுல் என்பவர் 1999ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், செம்மணியில் உடல்கள் ஆடைகள் இன்றிப் புதைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டு முகாம்களில் இருந்து கொண்டுசென்று செம்மணியில் புதைக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், செம்மணி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

