செம்மணி விடயத்தில் சந்தேகம் இருந்தால் நீதி அமைச்சருடன் கலந்துரையாடுங்கள்! சபை முதல்வர் அறிவுறுத்து

Author
0

 செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(22.10.2026) நடைபெற்ற நச்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உரையாற்றுகையில், "அனோஜன் விவகாரத்தில் நாடு என்ற ரீதியில் வெற்றி பெற்றுள்ளோம். ஒட்டுமொத்த இலங்கை மக்களும் அனோஜன் விவகாரத்தில் வேதனையடைந்த நிலையில், அனைவரின் மனங்களுக்கும் சவூதி அரசு ஆறுதலளித்துள்ளது.


சவூதி இராச்சியத்துக்கும் அந்த நாட்டின் நீதிக்கட்டமைப்புக்கும் அரசு சார்பிலும் நாட்டு மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தற்போது பேசப்படுகின்றது. இந்த விடயம் உணர்வுபூர்வமானது மற்றும் கொடுமையானது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு எதிராக அரசு ஒருபோதும் செயற்படவில்லை. அகழ்வுப் பணிகளுக்கும் சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆரம்பத்தில் இருந்தே போதுமான நிதி ஒதுக்கப்பட்டதுடன், முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளோம்.

மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் குறிப்பிடப்படுகின்றன. இந்த அறிக்கை தனிநபர் ஒருவரால் மாத்திரம் தயாரிக்கப்படவில்லை. நீதிபதிகளின் கண்காணிப்பில்தான் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசியப் பொறிமுறைக் கட்டமைப்பு பலவீனமடையும் சந்தர்ப்பத்தில்தான் சர்வதேச பொறிமுறையை நாட வேண்டும்.

ஆகவே, இந்த விடயத்தில் தேசியக் கட்டமைப்பு வலுவானதாகவே காணப்படுகின்றது.

தனிப்பட்ட நபரின் பெயர்களைக் குறிப்பிட்டுச் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது அது எதிர்காலச் செயற்பாடுகளுக்குப் பாதிப்பாக அமையும்.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சந்தேகங்கள் காணப்பட்டால், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடலாம்.

ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துகொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு செயற்படுகின்றோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top