நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனதீரா தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் 3 ஆம் திகதி முதல் 25 மண்சரிவு முன் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.
டித்வா புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில் மண்சரிவின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சில இடங்களில், பாறைகள் மற்றும் மண் அடுக்குகள் தற்காலிகமாக சிக்கியுள்ளதாகவும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் அவை அடித்துச்செல்லப்படும் அபாயம் அதிகமாக உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த மண்சரிவு முன்னெச்சரிக்கையானது இன்று (22) இரவு 10.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுர மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு எச்சரிக்கை நிலை 2 கீழ் மண்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கண்டி மாவட்டம்: உடபாலத்த, மெததும்பற, குண்டசாலை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி, எலப்பத்த, குருவிட்ட
சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களும் வாகன சாரதிகளும்,மண்சரிவுகள், பாறைச்சரிவுகள் போன்ற ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், அவசர காலங்களில் பாதுகாப்பான இடங்களைத் தேடுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மண்சரிவுக்கான அறிகுறிகள் (மண்ணில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள்/மின் கம்பங்கள் சாய்வது, திடீரென ஊற்றுநீர் தோன்றுவது போன்றவை) தென்பட்டால், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

