பிடியாணையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சற்றுமுன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றிற்கு அமைவாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஞானசார தேரருக்கு எதிராக அண்மையில் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
குறித்த பிடியாணை தொடர்பில் தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காகவே சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் இவ்வாறு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
தற்போது சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர், இன்று (05) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் படி, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
கைது செய்வதற்கான பிடியாணை நிலுவையில் இருந்தபோதிலும் தலைமறைவாக இருந்த கலகொட அத்தே ஞானசார தேரரை, களுத்துறை - தீனியாவல பகுதியில் உள்ள ஒரு காட்டு ஆசிரமத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

