ஹிருணிகாவின் மேன்முறையீட்டை விசாரிக்க மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம்

Author
0

 சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டை விசாரிப்பதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசரினால் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கவுள்ளது.

குறித்த மேன்முறையீடு தொடர்பில் தீர்ப்பு வழங்குவதில் நீதியரசர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக அது மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசரிடம் அனுப்பி வைக்கப்பட்டது.

 

இதற்கமைய, இந்த மேன்முறையீடு இன்று (11) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய முன்னிலையில் அழைக்கப்பட்டது. 



 

இதன்போது, மேன்முறையீட்டை விசாரிப்பதற்காக தலைமை நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய, பி. குமாரன் ரத்னம் மற்றும் பிரதீப் ஹெட்டியாராச்சி ஆகியோ அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மேன்முறையீடு ஜனவரி 21ஆம் திகதி அந்த நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

2015ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி இளைஞர் ஒருவர் டிஃபென்டர் ரக வாகனத்தில் கடத்தப்பட்டு, சட்டவிரோதமாக தடுத்து வைத்துத் தாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஹிருணிகா பிரேமச்சந்திரவை குற்றவாளியாகக் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அவருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்திருந்தது.

 

குறித்த தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி அவர் இந்த மேன்முறையீட்டைச் சமர்ப்பித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top