மதுவரி திணைக்கள ஆணையாளரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு..!

tubetamil
0

மன்னார், தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை மக்களின் எதிர்ப்பு காரணமாக உடனடியாக தற்காலிகமாக மூடுமாறு மதுவரித் திணைக்கள ஆணையாளர் எழுத்தில் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை தொடர்பில் நேற்று ஒன்றுகூடிய மக்கள் பிரேதப் பெட்டி சகிதம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், போராட்டமானது புதிதாக திறக்கப்பட்ட மதுபானசாலைக்கு முன்பாக இடம்பெற்றது. இந்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், ஆடை உற்பத்தி நிலையம், பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்றன.


இந்நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி இங்கு மது விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று மக்கள் குற்றம் சுமத்தினர்.

இதேபோன்று கடந்த மாதம் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, இந்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் எனக் கோரி மன்னார் மாவட்ட அரச அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.

தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் மதுபான விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை பிரேதப் பெட்டியுடன் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்போது சம்பவ இடத்துக்கு மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப், மன்னார் மாவட்ட அரச அதிபர்க.கனகேஸ்வரன் சென்று மக்களுடன் கலந்துரையாடினார்.

இந்தப் பிரச்சினையை அரச அதிபர் உடனடியாக மதுவரி திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்ற நிலையில் குறித்த மதுபானசாலையை தற்காலிகமாக மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் நிரந்தர தீர்வு கோரி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்று மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு முயற்சிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top