ஜனாதிபதி, பிரதமர் பெயர்களை பயன்படுத்தி ஏமாற்றும் கும்பல்கள்
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இடம்பெறுவது போன்ற போலி AI (Deepfake) காணொளிகள் இணையத்தில் பரவி வருவதாக இலங்கை கணினி அவசரகால தயார்நிலைப் பேரவை (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த காணொளிகள், மக்களை முதலீட்டு திட்டங்களில் பணம் செலுத்த தூண்டுவதற்காக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போலி காணொளிகளில் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்கள் மற்றும் குரல்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

அதிக வருமானம் கிடைக்கும் என கூறி முதலீடு செய்ய அழைப்பு விடுப்பது.

வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்புவது.

மோசடி இணையத்தளங்களுக்கான இணைப்புகள் மூலம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பணத்தை திருட முயற்சிப்பது.
ஆகியவை இந்த மோசடிகளின் முக்கிய நோக்கங்களாக இருப்பதாக SLCERT தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் எந்த சந்தேகத்திற்கிடமான இணைப்புகளையும் திறக்க வேண்டாம் என்றும், தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இணைய பாதுகாப்பில் எச்சரிக்கையுடன் இருந்து, தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி செயல்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.