மட்டக்களப்பு – கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை சார்ஜ் செய்த நிலையில் மார்பில் வைத்துக்கொண்டு உறங்கிய 19 வயது இளைஞர் ஒருவர், தொலைபேசி வெடித்ததில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (27) மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றதாக பாசிக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த குறித்த இளைஞர், வீட்டில் உறங்கச் சென்றபோது தனது கையடக்கத் தொலைபேசியை மின்சாரத்தில் சார்ஜ் செய்தவாறு, நெஞ்சில் வைத்துக்கொண்டு உறங்கியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது தொலைபேசி அதிகமாக சூடாகி வெடித்ததாகவும், இதில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
