நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 633 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளப் பகுதியில் இதுவரை 626 பேர் உயிரிழந்துள்ளதுடன், 517 வெளிநாட்டவர்கள் உட்பட 2,426 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பேரழிவு மேலாண்மை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, திபெத் எல்லைப் பகுதியில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 554 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மீட்புப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து உருவான புதிய செயற்கைக் குளம் உடையும் அபாயம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள், தற்போது ஆபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்துவதற்காக இந்தியா மற்றும் சீனாவிடமிருந்து சிறப்பு மீட்புக் குழுக்களின் உதவியை நேபாள அரசு கோரியுள்ளது.

இமயமலைப் பகுதியில் சுமார் 5,200 மீற்றர் உயரத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் உருவான இந்த பேரழிவு வெள்ளம், நேபாளத்தின் பல பகுதிகளில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது.

சேறு மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கக்கூடும் என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.