மொனராகலை – கும்புக்கன பகுதியில் நேற்று (21) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரமும் டிப்பர் லொறியொன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
டிப்பர் லொறியில் பயணித்த 10 பேரில் எட்டு பேர் படுகாயமடைந்து மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தொடம்கஸ்லந்த, புத்தல மற்றும் ஹொரபொக்க பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
உயிரிழந்தவர்களில் ஆர்.டி. ஷெஹான் எரங்க (20), நிரோஷன் தேவேந்திர (55), ஏ.எம். திலகரத்ன பண்டார (56), பசிந்து தினேஷ் (21) மற்றும் தாரக மதுஷான் (31) ஆகியோர் அடங்குகின்றனர்.

இதில் ஏ.எம். திலகரத்ன பண்டார (56) மற்றும் பசிந்து தினேஷ் (21) ஆகியோர் தந்தை மற்றும் மகன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஜை வழிபாட்டிற்காக குடும்பமாக டிப்பர் லொறியில் பயணித்தபோதே இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துக்குள்ளான டிப்பர் லொறியின் சாரதி மற்றும் பயணிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தின் சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.