
நுவரெலியா: நகர எல்லைக்குள் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைபேசி இணைப்புக் கேபிள்களை வெட்டி, அதிலுள்ள செம்புக் கம்பிகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் இருவர் நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சுமார் 5 மாதங்களாக மேல்குளம் வீதி, சந்ததென்ன உள்ளிட்ட பகுதிகளில் கேபிள்கள் வெட்டப்பட்டு செம்புக் கம்பிகள் திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள்:
-

சுமார் 3 கிலோ செம்புக் கம்பிகள்
-

344 அடி நீளமான செம்பு அல்லாத கம்பிகள்
- கேபிள்களில் இருந்து அகற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரப்பர் உறைகள்
-

கம்பிகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 2 கத்திகள்
கைது செய்யப்பட்டவர்கள் கந்தபொல பகுதியைச் சேர்ந்த 40 வயதான பழனி அப்பன் தங்கராஜ் மற்றும் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதான ராமநாதன் மாதவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொலைத்தொடர்பு கேபிள்களை வெட்டுவதால் சொத்துச் சேதம் மட்டுமன்றி, பொதுமக்களின் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்படுவதுடன் நிறுவனத்துக்கும் நிதி இழப்பு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.