வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு மனிதாபிமான உதவியாக 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தால் உயிரிழப்புகள், இடப்பெயர்வுகள் மற்றும் பாரியளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு முன்னெடுக்கப்படும் நிவாரணம் மற்றும் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த உதவி வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதே இந்த நிதியுதவியின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நேபாள வெளிவிவகார அமைச்சர் சிசிர் கனாலுடன் தொலைபேசியில் கலந்துரையாடி, இலங்கையின் இரங்கலையும் முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் தொடர்ந்தும் நிலைமையை அவதானித்து, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மேலதிக உதவிகளை வழங்குவதற்கான வாய்ப்புகளையும் இலங்கை ஆராயும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
