இலங்கையின் மத்திய மலைநாட்டு சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்காக புதிய அதிகாரசபையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலம் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, அதன் பின்னர் அந்தப் பகுதிக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தேவையான அனைத்து அதிகாரங்களும் அதிகாரசபைக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள மலைச்சரிவுகள், நீரூற்றுகள் வற்றுதல், ஆறுகள் மற்றும் ஓடைகள் தூர்ந்துபோதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் அழிவுகள் குறித்து கவலை வெளியிட்ட ஜனாதிபதி, மத்திய மலைநாடு நாட்டின் “இதயம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபையை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டு பண்டாரவளை பூனாகலை – கபரகலை நிலச்சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ‘நவோதயா புரம்’ வீட்டுத் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட்ட நிகழ்வில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

மலையக மக்களின் உரிமைகள்
மலையக மக்கள் நாட்டில் சம உரிமையுடன் வாழ்வதற்கான வாய்ப்புகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தோட்ட நிறுவனங்களின் தற்போதைய ஒப்பந்தங்கள் 2042ஆம் ஆண்டில் முடிவடையவுள்ள நிலையில், மக்களின் காணி மற்றும் ஏனைய உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் வருமான வாய்ப்புகள் தொடர்பிலும் மலையக மக்களுக்காக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.