அனுமதியின்றி கோதுமை மா விலை உயர்வு : நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Author
0

 நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியோ அல்லது முன்னறிவிப்போ இன்றி கோதுமை மாவின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளமைக்கு எதிராக, சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை தீர்மானித்துள்ளது.

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் கோதுமை மா அத்தியாவசியப் பொருளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டவிரோத விலை உயர்வு குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு கோரி உற்பத்தி நிறுவனங்களுக்கு விசேட கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில், இந்தச் சட்டவிரோத விலை உயர்வு குறித்து ஆராய்வதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகார சபைச் சட்டத்தின் கீழ் இத்தகைய முறையற்ற விலை உயர்வுகள் குறித்து விசாரணை நடத்த அதிகார சபைக்கு முழு அதிகாரம் உள்ளதால், அமைச்சரின் ஆலோசனையின் பேரில் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் நிறுவனங்கள் தமது விளக்கங்களை முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

கோதுமை மாவின் விலை உயர்த்தப்பட்டுள்ள போதிலும், மா சார்ந்த உணவுப் பொருள்களின் விலைகளை உயர்த்த வேண்டாம் என நுகர்வோர் விவகார அதிகார சபை, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்திடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பேக்கரி உரிமையாளர்கள் சங்கம், தற்போதைய சூழலில் மா சார்ந்த தயாரிப்புகளின் விலைகளை உயர்த்தாமல் இருக்க இணக்கம் தெரிவித்துள்ளன.


கோதுமை மா உற்பத்தி நிறுவனங்களின் இந்தத் தன்னிச்சையான விலை அதிகரிப்புக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளது என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் சமந்தா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

சட்ட ஆலோசனைகள் கிடைத்தவுடன் மேற்படி நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தினூடாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top